ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்
In ஆசிரியர் தெரிவு February 22, 2021 2:52 am GMT 0 Comments 1272 by : Dhackshala
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஆரம்பமாகிறது.
இம்முறை கூட்டத்தொடர் கொரோனா பரவல் காரணமாக தொலைகாணொளி ஊடாக இடம்பெறவுள்ளது.
தொலைகாணொளி ஊடாக இந்த கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளமை இதுவே முதற்தடவையாகும்.
இன்றைய முதல்நாள் அமர்வில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரஸ் மற்றும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.
மனித உரிமை ஆணைாயாளரின் முதல் உரையின்போது இலங்கை குறித்து பிரஸ்தாபிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அதேநேரம், இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை நாளை மறுதினம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இன்று ஆரம்பமாகும் இக் கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் 24ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இந்தக் கூட்டத் தொடரில் உலக நாடுகளின் மனித உரிமை நிலை குறித்து கலந்துரையாடப்படவுள்ளதுடன், இலங்கை குறித்து விவாதமும் 23 அல்லது 24ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன கொழும்பில் இருந்தவாறு இணைய வழியில் ஜெனீவா பேரவையில் உரையாற்றவுள்ளார்.
தினேஷ் குணவர்த்தன உரையாற்றும்போது, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையை நிராகரிப்பார் என்றும் அது தவறான தகவல்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்று உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏற்கனவே இலங்கை அரசாங்கமானது அந்த அறிக்கையை நிராகரித்து 18 பக்க அறிக்கை ஒன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு அனுப்பி வைத்துள்ளது.
இதற்கு முன்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு கடந்த நல்லாட்சி அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியிருந்தது.
எனினும் தற்போதைய அரசாங்கத்தினால் கடந்த ஆண்டு குறித்த அனுசரணை மீளப்பெறப்பட்டமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
இதேநேரம், 22ஆம் திகதி நடைபெறும் அமர்வில் சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் லீ உரையாற்றவுள்ளதுடன், 23ஆம் திகதி இடம்பெறவுள்ள அமர்வில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் உரையாற்றவுள்ளார். இதன்போது இலங்கை விவகாரம் குறித்து பிரஸ்தாபிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, இந்தக் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக மற்றுமொரு புதிய பிரேரணையை பிரித்தானியா தலைமையிலான கூட்டு நாடுகளினால் முன்வைக்கப்படவுள்ளன.
குறித்த அறிக்கையும் நேற்று முன்தினம் வெளியாகியிருந்ததுடன், அந்த அறிக்கையையும் இலங்கை அரசாங்கம் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.