தமிழ் விவசாயிகள் மோசமாக பந்தாடப்படுகின்றார்கள் – கஜேந்திரன் விசனம்
இந்த அரசாங்கமானது சிங்கள மக்களின் பொருளாதாரத்தை வளர்க்கும் செயற்பாட்டினை முன்னெடுப்பதுடன் தமிழ் விவசாயிகள் மோசமாக பந்தாடப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமது காணிகளை வன வளத்திணைக்களத்திடமிருந்து மீட்டுத்தருமாறு ஆசிக்குளம் கிராம மக்கள் வவுனியா மாவட்ட மனித உரிமை ஆணைக்குழுவில் இன்றையதினம்(வியாழக்கிழமை) முறைப்பாடு ஒன்றை கையளித்தனர். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனும் உடனிருந்தார்.
அதன் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கருத்து வெளியிட்டுள்ள அவர், “பொதுமக்களிற்கு சொந்தமான காணிகள் வன வள திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
திடீர் என வருகைதந்த அவர்கள் மக்களிற்கு எந்தவிதமான முன்னறிவித்தலையும் வழங்காமல் மக்களின் காணிகளில் மரங்களை நாட்டியுள்ளனர்.
அந்த பகுதிகளிற்குள் மக்கள் செல்லகூடாது. மாடுகளையும் மேய்ச்சலிற்கு விடக்கூடாது என்று அச்சுறுத்தியுள்ளனர். இந்த செயற்பாடானது மக்களின் உரிமைகளை மீறும் செயற்பாடாகவே உள்ளது.
இதனுடன் தொடர்புடைய அமைச்சர் எமக்கு உறுதிமொழிகளை தந்தபோதும் இன்றுவரை இந்த காணிகள் மக்களிடம் கையளிக்கப்படவில்லை.
ஒருபுறத்தில் விவசாயிகளை பாதுகாக்கப்போகின்றோம் என்று ஜனாதிபதி பல்வேறுபட்ட செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன.
அவை சிங்கள பெரும்பாண்மை மக்களுடைய பொருளாதாரத்தை பெருப்பிப்பதற்கான நோக்கத்தில் மாத்திரம் மேற்கொள்ளப்படுகின்றதே தவிர தமிழ் விவசாயிகள் மோசமாக அழிக்கப்படும் நிலை தான் காணப்படுகின்றது.
எங்களுடைய விசாயிகள் பந்தாடப்படுகின்றார்கள். நிலங்கள் பறிக்கப்படுகின்றது. அனைத்து திணைக்களங்களும் தமிழர்களது நிலங்களை கபளீகரம் செய்து தமிழ் மக்களது விவசாய பொருளாதாரத்தை அழிக்கின்ற செயற்பாட்டையே மேற்கொண்டுவருகிறது.
இந்தசெயற்பாடு தொடர்வதற்கு அனுமதிக்கமுடியாது. அந்தகாணிகளை மக்களிடம் பெற்றுக்கொடுக்கும் வரைக்கும் நாம் அவர்களுடன் நிற்போம்.“ எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.