ராகுல் மற்றும் ரன்தீப் சுர்ஜிவாலா நேரில் ஆஜராக நீதிமன்றம் அழைப்பாணை
In இந்தியா April 8, 2019 3:06 pm GMT 0 Comments 2097 by : Jeyachandran Vithushan
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அக்கட்சியின் செய்தி தொடர்பாளார் ரன்தீப் சுர்ஜிவாலாவும் அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக குஜராத் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் அஹமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கி பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது அதிகளவில் பணத்தை மாற்றியதாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா தெரிவித்தார்.
அதேபோல ராகுல் காந்தியும் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அஹமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியின் தலைவர் அஜேய் பட்டேல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த அஹமதாபாத் நீதிமன்றம் அவதூறு வழக்கில் முகாந்திரம் இருப்பதால் இதனை விசாரிப்பதாக தெரிவித்தது. அத்துடன் இது தொடர்பாக வரும் மே மாதம் 27 ராகுல் காந்தி மற்றும் சுர்ஜிவாலா நேரில் ஆஜராக வேண்டும் என்று அழைப்பாணை விடுத்துள்ளது..
முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் காங்கிரஸ் செய்தி தொடர்பாளார் ரன்தீப் சுர்ஜிவாலா, “தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படி, அஹமதாபாத் மாவட்ட வங்கி பண மதிப்பிழப்பு நடைபெற்ற 5 நாட்களில் 745.58 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய பணத்தை மாற்றியுள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் இந்த வங்கியின் தலைவர் அஜேய் பட்டேல் பாஜக தலைவர் அமித் ஷாவிற்கு மிகவும் நெருக்கமானவர். இதனால் இந்தச் சம்பவம் தொடர்பாக தகுந்த விசாரணை நடத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டார் அதில் “வாழ்த்துகள் அமித் ஷாஜி. நீங்கள் மேலாளராக இருக்கும் அஹமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கி தான் பழைய பணத்தை மாற்றுவதில் முதல் பரிசு பெற்றுள்ளது.
நாட்டு மக்கள் அனைவரும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டிருக்க உங்கள் வங்கி மட்டும் 5 நாட்களில் 750 கோடி ரூபாய் மாற்றி சாதனைப் படைத்துள்ளது” எனப் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.