23 ஆண்டுகளுக்குப் பின்னர் தஞ்சைப் பெரியகோயிலில் குடமுழுக்கு!
23 ஆண்டுகளுக்குப் பின்னர் தஞ்சைப் பெரியகோயிலில் இன்று(புதன்கிழமை) குடமுழுக்கு நடைபெறுகின்றது.
தமிழினத்தின் தனிப்பெரும் அடையாளமாகத் திகழ்கிறது தஞ்சைப் பெருவுடையார் கோயில்.
பெரியகோயில் என்று அழைக்கப்படும் தஞ்சைப் பெருவுடையார் கோயிலை எழுப்பிய சோழப் பேரரசன் ராஜராஜனின் ஆட்சி, நிர்வாகத் திறன், ராணுவ வலிமை, கலை, கட்டுமானம் என்று அனைத்துக்கும் சாட்சியாக நிற்கிறது.
சுல்தான்களின் தாக்குதல்கள், மாலிக்குகளின் படையெடுப்புகள், மேலை நாட்டினரின் பீரங்கிகள், இயற்கைச் சீற்றங்களான இடி, மின்னல், நில நடுக்கம் ஆகியவற்றைக் கடந்து 1000 ஆண்டுகளுக்கும் மேல் கம்பீரமாக நிற்கும் பெருவுடையார் கோயிலுக்கு இன்று குடமுழுக்கு நடைபெறுகின்றது.
தஞ்சைப் பெரியகோயில் கட்டி முடிக்கப்பட்ட பிறகு, கி.பி 1010 இல் ராஜராஜனால் குடமுழுக்கு செய்யப்பட்டது. அதற்குப் பிறகு 1729, 1843 ஆகிய ஆண்டுகளில் தஞ்சை மராத்திய மன்னர்களால் குடமுழுக்கு செய்யப்பட்டது.
பின்னர் 1997-ம் ஆண்டு குடமுழுக்கு செய்யப்பட்டது. தற்போது 23 ஆண்டுகளுக்குப் பின்னர் தஞ்சைப் பெரியகோயிலில் ஓதுவார்களால் தீந்தமிழ்த் தேவாரம் முழங்க, இன்று குடமுழுக்கு நடைபெறுகின்றது.
கி.பி 985ல், சோழப் பேரரசனாக முடிசூடிக்கொண்ட ராஜராஜன், தன் 25 -ம் ஆட்சியாண்டில் உலகமே வியக்கும் வண்ணம் பெரிய கோயிலைக் கட்டியெழுப்பினான்.
ராஜராஜன் காலத்தில் இக்கோயில், ஹராஜராஜேஸ்வரம் என்று அழைக்கப்பட்டது.
அதன்பிறகு, பெருவுடையார் கோயில், பெரியகோயில், பிரகதீஸ்வரர் ஆலயம் என்று பல்வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. கி.பி 1003 – 1004ல் கட்டத் தொடங்கிய பெரிய கோயில், கி.பி 1010ல் கட்டி முடிக்கப்பட்டது.
இதை சுமார் ஏழு ஆண்டுகளில் கட்டிமுடிக்கப்பட்ட பிரமாண்டத்தின் உச்சம் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். முழுவதும் கற்களால் ஆன பெரியகோயிலின் எடை, சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் தொன் என்கிறார்கள் கட்டடக்கலை நிபுணர்கள்.
216 அடி உயரம் கொண்ட கோயிலின் அஸ்திவாரம், வெறும் ஐந்தடி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.