Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையுடன் 70 வருட கால பிணைப்பு: தடம்பதிக்க வருகிறார் மல்கம் டர்ன்புல்!

In இலங்கை
Updated: 11:21 GMT, Oct 30, 2017 | Published: 10:47 GMT, Oct 30, 2017 |
0 Comments
1333
This post was written by : Varshini

இலங்கைக்கும் அவுஸ்ரேலியாவுக்கும் இடையிலான 70 வருட கால பிணைப்பை அடையாளப்படுத்தும் வகையில், அவுஸ்ரேலிய பிரதமர் மல்கம் ட்ர்ன்புல் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 2ஆம் திகதி இவ் விஜயம் அமையவுள்ளதாக, கொழும்பிலுள்ள அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகராலயம் இன்று (திங்கட்கிழமை) விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விஜயத்தின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாக குறித்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் ஏற்பட்டு 70 வருட காலம் நிறைவடைந்துள்ள இச் சந்தர்ப்பத்தில், இலங்கைக்கு விஜயம் செய்வதை முன்னிட்டு தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாக மல்கம் டர்ன்புல் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்புகளை வலுப்படுத்தல், ஆட்கடத்தல் உள்ளிட்ட சர்வதேச கடத்தல் செயற்பாடுகளை தடுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாட எதிர்பார்ப்பதாகவும் மல்கம் டர்ன்புல் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இவ்வருட ஆரம்பத்தில் ஜனாதிபதி மைத்திரி மற்றும் பிரதமர் ரணில் ஆகியோர் அவுஸ்ரேலியாவுக்கு விஜயம் செய்திருந்த போது, அவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பு மகிழ்ச்சியாக அமைந்திருந்ததாகவும் அவுஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

புகலிடக் கோரிக்கையாளர்கள் விடயத்தில் அவுஸ்ரேலியா இறுக்கமான சட்டங்களை கடைப்பிடித்து வருகின்றது. குறிப்பாக கடல் மார்க்கமாக சென்ற இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் பலர், கடந்த காலத்தில் திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர். அந்த வகையில், அவுஸ்ரேலிய பிரதமரின் இலங்கை விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையவுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg