பலஸ்தீனம் – இஸ்ரேல் சமாதானத்துக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் – பென்ஸ்
சமாதான நடவடிக்கையை முன்னெடுக்க பலஸ்தீனமும் இஸ்ரேலும் சம்மதித்தால், அமெரிக்கா தனது ஆதரவை வழங்குமென, அமெரிக்கத் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.
எகிப்துக்கு நேற்று (சனிக்கிழமை) விஜயம் செய்த அமெரிக்கத் துணை ஜனாதிபதி பென்ஸ், எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல் சிசியை சந்தித்துக் கலந்துரையாடியபோதே, இதனைக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘பலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கிடையில் காணப்படும் பிரச்சினைக்குத் தீர்வு காண அந்த நாடுகள் முன்வந்தால், அமெரிக்கா தனது முழுமையான ஆதரவை வழங்கும்’ என்றார்.
புனித நகரான ஜெருசலேமை, இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த டிசெம்பர் 6ஆம் திகதி ஒருதலைப்பட்சமாக அங்கீகரித்திருந்தார். இவரது இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்குமிடையில் காணப்பட்டுவந்த முறுகல் நிலைமை விரிவடைந்துள்ளது. அத்துடன், இஸ்ரேலுடன் சமாதானப் பேச்சை முன்னெடுப்பதற்கு அமெரிக்க தலைமையிலான மத்தியஸ்தத்துக்கு பலஸ்தீனம் மறுப்புத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.