Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்ரீதேவியின் மரணமும், மருந்துகளின் ஆளுமையும்

In
Updated: 01:32 GMT, Mar 4, 2018 | Published: 15:32 GMT, Mar 3, 2018 |
0 Comments
1045
This post was written by : Puvanes

அரசனும், தேவியும் அமர்ந்திருந்தனர், தேவியே ஜக்கம்மா, பூமாதேவி, காளிதேவி இப்படிப் பல பெண் தெய்வங்களின் பெயர்களின் முன்னோ பின்னோ இடப்படும் அடைமொழியாக  தேவி அமைந்துள்ளது நமது வரலாற்றில்.”மயிலு என்னும் ஸ்ரீதேவி மறைந்து விட்டார்” என்கிற செய்தி செரிமானம் அடையாவிட்டாலும் உண்மை நிலவரம் கலவரப்படுத்தி விட்டன.

நடிப்பில் தாம் ஏற்றுக்கொண்ட பாத்திரமாகவே மாறிவிடும் “அழகு மயில் ஸ்ரீதேவி” தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என… இந்தியத் திரைப்படங்களின் அனைத்து மொழிகளிலும் நடிப்பாட்சி நடாத்தி, விண்ணில் ஒளிரும் தாரகைபோல, மண்ணில் உலவிவந்த திரையுலகக் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர்.

ஏற்கெனவே தமது மூக்கை அறுவை மருத்துவம் மூலம் சீரமைத்துக் கொண்டிருந்தாலும் அதனால் அவருக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. ஆனால் முகச்சுருக்கம், உடல் தோல் சுருக்கம் ஏற்படாத வண்ணம்… அமெரிக்காவில் மேற்கொண்ட புறஅழகை மேலும் மேம்படுத்தும் செயல் முறைக்காகத் தொடர்ந்து மேலைத் தேய மருந்துகளை உட்கொண்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது.

அதேபோல், இன்னும் சில சின்னச் சின்னத் உடல் திருத்தங்களுக்காக மருந்துகளைப் பயன்படுத்தி வந்திருக்கிறார். நல்வாழ்வில் அக்கறை கொண்டவராக இருந்த ஸ்ரீதேவி  வருத்தக்காரராகவே வாழ்க்கையை நகர்த்தி இருக்கிறார் என்கின்ற தகவல்கள் வேதனை அளிப்பதாகவே இருகின்றன.

வீரியமிக்க மருந்துகள் சில சமயம் மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்தி, சுயநினைவையும் இழக்கச் செய்யும் என்கின்றது மருத்துவ ஆய்வுகள். மிகுதியாக எடுத்துக்கொண்ட மருந்துகளும் விருந்து நேர மது மயக்கமும் சேர்ந்து    “சடன் கார்டியாக் அரெஸ்ட்” (Sudden Cardiac Arrest) என்கின்ற நிலையை ஏற்படுத்தி  குளியலறை நீர்த் தொட்டியிலேயே மரணத்தை உண்டாக்கி இருக்கும் என்கிறார்கள் அவரது உடலை ஆராய்ந்த துபாய் மருத்துவர்கள்.

ஸ்ரீதேவியின் உடலில் குறிப்பிட்ட அளவு ஆல்கஹால் செறிவு இருந்ததும் உடற் கூராய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தன்னால் வருஞ்சாவு தானே அதையழைத்தே
முன்னால் நிறுத்தல் பிழை.

நடிகர் தயாரிப்பாளர் பாக்யராஜ் ஒரு திரைப்படம் எடுக்கத் தொடங்கியதுமே ஹிந்தி திரைப்படத் தயாரிப்பாளரான போனி கபூர் சென்னை சென்று அந்தப் படத்தின் இந்தி மொழிக்கான  உரிமையை வாங்கி விடுவார். அந்தப் படத்தின் கதைகளில் போனி கபூரின் தம்பி அனில் கபூரும் ஸ்ரீதேவியும் நடிப்பது வழக்கம்.

ஸ்ரீதேவியை முதன்முதலாக தமது தயாரிப்பில் நடிக்கக் கேட்டுக்கொண்டபோது, போனி கபூரிடம் பத்து இலட்சம் ரூபாய் சம்பளம் கேட்டிருக்கிறார் ஸ்ரீதேவியின் அம்மா ராஜேஸ்வரி. போனி கபூர் கேட்ட தொகையைவிடக் கூடுதலாகவே ஒரு தொகையைக் கொடுத்து ராஜேஸ்வரியின் நம்பிக்கைக்கு உரியவரானார்.

தாய் மீது மிகுந்த பற்றும் பாசமும் வைத்திருந்த ஸ்ரீதேவி, தம் அம்மாவுக்கு அடிக்கடிவரும் தலைவலியால் கவலைப் பட்டபோது… அமெரிக்காவில் அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார் போனி கபூர். ஆனால் அறுவை மருத்துவம் செய்யப்பட வேண்டிய  பகுதியைத் தவிர்த்துவிட்டு, தவறுதலாக அறுவை செய்யப்பட்டதால், கூடுதல் துன்பப்பட்டு… சில காலத்திலேயே  காலமாகிறார் ஸ்ரீதேவியின் அம்மா. அதற்காக அந்த அமெரிக்க மருத்துவமனை நிருவாகம் பெருமளவு இழப்பீடு வழங்கியிருந்தது.

தமக்குப் பேருதவியாக இருந்த போனி கபூரையே திருமணம் செய்துகொண்டு ஜான்வி, குஷி என்கிற இரு மகள்களுக்குத் தாயானார் ஸ்ரீதேவி.

சூழல் பொறுத்தே துயரம் அதைத்தவிர்த்து
வாழல் பொறுத்தே வளம்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சாலையில் உள்ள மீனம்பட்டி என்கின்ற பழைமையான கிராமத்தில் 1963இல் பிறந்த ஸ்ரீதேவிக்கு பெற்றோர் இட்டபெயர் சிறி அம்மாயங்கர். பெரிய அளவிலான வேளாண்மை நிலங்களைக் கொண்ட ஐயப்பன் என்கின்றவரின்  இரண்டாம் மனைவியான ராஜேஸ்வரிக்குப் பிறந்த இரண்டு மகள்களில் மூத்தவர் ஸ்ரீதேவி, தங்கையான  சிறிலதா பிறந்த சில ஆண்டுகளிலேயே ஸ்ரீதேவி குடும்பம் சென்னையில் குடி புகுகிறது.

1969இல் ”துணைவன்” படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீதேவியை  1976இல் ”மூன்று முடிச்சு” வில் கதாநாயகியாக்கினார் கே.பாலசந்தர். அடுத்த ஆண்டிலேயே ”பதினாறு வயதினிலே” படம் மூலம் மயிலுவாக ஸ்ரீதேவியை மக்கள் மனங்களில் பதியச் செய்தார் பாரதிராஜா.

”நடிகைகள் பலர் வெளியில் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் காட்டிக்கொள்கின்றனர். ஆனால், உண்மையில் அவர்கள்தம் சொந்த வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதில்லை. அதுபோலத்தான் நடிகை ஸ்ரீதேவியும் அவர் தமது சொந்த வாழ்க்கையில் மகிழ்ச்சியே இல்லாமல்தான் காணப்பட்டார். இப்படி நினைவு கூர்கிறார் பாலிவுட் பட இயக்குநர் ராம் கோபால் வர்மா….

இந்தியாவிலே அனைவராலும் விரும்பப்பட்ட நடிகையாக இருந்த அவர் சொந்த வாழ்வில் மகிழ்ச்சியாக இருந்தாரா,,,? என்று கேள்வி எழுப்பினால், இல்லை என்றுதான் பதில் வரும்,அவருடன் நெரங்கிப் பழகியவர்களிடம் இருந்து.

தமது வாழ்வில் மிகவும் சரியாக இருந்த ஸ்ரீதேவி  நிறைவாக, மகிழ்ச்சியாக  வாழ்ந்தார் என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றனர் அவர் உண்மை வாழ்வை அறியாதவர்கள். ஆனால்,  உண்மையாகவே மகிழ்ச்சிகரமாக திருப்திகரமாக  வாழ்க்கையை வாழ்ந்தாரா…? என்பது கேள்விக்குறியே” என்றார் ஸ்ரீ தேவி குடும்பத்துடன் நெருங்கிப் பழகிய ராம் கோபால் வர்மா.

இன்பம் அதில்துன்பம் யாருக்கும் உள்ளவை
அன்புமுக மாத லழகு.

ஸ்ரீதேவியின் மூக்கு அறுவைக்கு முன்பு கவர்ச்சியாக நடித்தபோதும்… அவர் முகத்தில் களங்கமற்ற குழந்தைத் தன்மை தூக்கலாகவே இருந்தது. மூக்கு அறுவை மருத்துவம் செய்த  பிறகுதான்… அவரது முழுவளர்ச்சி தெரிந்தது. இந்தியாவின் கனவுக் கன்னியாக, தமிழ்நாட்டுத் தாரகையாக திரையுலகில் உயர்ந்தபோதும் 54 வயதிலேயே நிகழ்ந்துவிட்ட ஸ்ரீதேவியின் மரணத்தைச் சட்டென்று மறக்கவோ ஏற்றுக்கொள்ளவோ முடியவில்லை.

வாழ்வே மாயம்-இந்த
வாழ்வே மாயம்.

 

– அறமொழியான்

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg