Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காணி விவகாரம்: வனவள பாதுகாப்பு பிரிவினருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

In இலங்கை
Updated: 11:14 GMT, Jun 20, 2018 | Published: 08:09 GMT, Jun 20, 2018 |
0 Comments
1072
This post was written by : Yuganthini

கிளிநொச்சி, ஜெயபுரம் பகுதியில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று (புதன்கிழமை) முன்னெடுத்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை 10 மணியளவில் பூநகரி பிரதேச செயலகம் முன்பாக நடைபெற்றது.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்,

“தமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைய வயல் காணிகளை வழங்க விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் 1883ஆம் ஆண்டு குறித்த பகுதியில் தலா ஒரு ஏக்கர் காணி வழங்குவதாக தெரிவித்த போதிலும் தற்போது குறித்த காணியை வனவள பாதுகாப்பு பிரிவினர் தமது பிரதேசமாக கூறி அவர்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். இதனை மீண்டும் எம்மிடம் கையளிக்க வேண்டும்.

அத்துடன் 1983ஆம் ஆண்டு சுமார் 48 பேருக்கு காணிகள் வழங்கப்பட்டது. இதன்போது தலா ஒரு ஏக்கர் காணி நெற்செய்கை காணியாக வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டது.

அதன்பின்னர் ஏற்பட்ட அசாதாரண சூழலில் பலர் இந்தியாவுக்கு சென்றனர். இருப்பினும் மிகுதியாக எஞ்சியவர்களிற்கு குறித்த காணி கிடைக்குமென நீண்ட காலமாக எதிர்பார்த்தோம். ஆனால் அது கிடைக்கவில்லை.

குறித்த காணிகளை வனவள பாதுகாப்பு பிரிவினர் தமது காணிகள் என கூறி மர கன்றுகளை நாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக பல்வேறு தரப்பினருக்கும் கடிதங்கள் வழங்கினோம். ஆனால் இதுவரை எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை.

நாங்கள் மிகவும் வறுமையில் வாழ்கின்றோம். இந்நிலையில் எமக்கு குறித்த காணிகளை வழங்கினால் ஓரளவேனும் எமது வறுமையை போக்க முடியும்” என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கவலை தெரிவித்தனர்.

மேலும் ஆர்ப்பாட்டத்தில ஈடுபட்ட மக்கள், பூநகரி பிரதேச செயலகம் வரை சென்று ஜனாதிபதிக்கான மகஜரை கையளித்தனர்.

இவ்விடயம் தொடர்பில் மகஜரை பெற்றுக்கொண்ட பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்ணேந்திரன் தெரிவிக்கையில்,

“குறித்த பகுதியில் மக்களிற்கு 1983ம் ஆண்டு காணி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அது குறித்த வரைபடம் இங்கு காணப்படவில்லை.

இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவிற்கு கோரிக்கை விடுத்துள்ளோம். இந்நிலையில் அவர்களிடமிருந்து பதில் கிடைக்கும்வரை எம்மால் ஒன்றும் செய்ய முடியாது.

எனினும் குறித்த மக்களிற்கு காணி கிடைப்பதற்கான முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றோம்.

மேலும் மக்களால் ஜனாதிபதிக்கென வழங்கப்பட்ட மகஜரை உரிய காலத்திற்குள் அனுப்பி வைக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும்” என அவர் தெரிவித்தார்.

இதேவேளை பிரதேச செயலகத்திலிருந்து வெளியேறிய ஆர்ப்பாட்டகாரர்கள், பூநகரி பிராந்திய வனவள பாதுகாப்பு திணைக்கள அலுவலகத்திற்கு சென்று தமது காணிகளை கையளிக்குமாறு கூறி மகஜர் ஒன்றை கையளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg