Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

வீச்சு

1704 Views

சகாக்களின் கூ(க)ட்டுக்குள் விக்கி..

அனைவருக்கும் வணக்கம்,

வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தொடர்ந்தும் அரசியலில் இருப்பதற்கான விருப்பத்தையும், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான அரசியல் பயணம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் வெளிப்படையாகவே தெரிவித்ததைத் தொடர்ந்து தமிழர் அரசியல் தளத்தில் மீண்டுமொரு அரசியல் பரபரப்பு தலைதூக்கியுள்ளது.

கூட்டமைப்பு மீது தமிழ் மக்களிடையே அதிகரித்து வருகின்ற அதிருப்தியை தமிழ் தேசியத்திற்கு மாறான தரப்புக்கள் அறுவடை செய்துவிடக் கூடாது என்று விரும்புகின்ற புலம்பெயர்ந்து வாழும் சில அமைப்புக்களின் அனுசரணைக்கு தீனி போடுகின்ற விதமாகவும் அமைப்பு ரீதியான புதியதொரு அல்லது கூட்டமைப்புக்கு மாற்றான அரசியல் இயக்கம் உருவாக்கம் பெறவேண்டும் என்று ஒரு அபிப்பிராயம் கடந்த சில வருடங்களாகவே புலம்பெயர் தளத்தில் ஆழமாக பேசப்பட்டு வருகின்றது.

அதற்கமைவாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது அதிருப்தி கொண்டு அதற்கெதிரான கடுமையான போக்கைக் கொண்டுள்ள தரப்புகளை ஒன்றினைத்து தமிழ் மக்களுக்கு மாற்றுத் தலைமை ஒன்றை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

அந்த மாற்றுத் தலைமையாக சுரேஷ் பிரேமச்சந்திரனோ, கஜேந்திரகுமார் பொன்னம்பலமோ தலைமை வகிக்கும் சூழல் இன்னும் தமிழ் மக்களிடையே ஏற்படவில்லை என்ற அனுமானங்களைத் தொடர்ந்து வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனை மாற்றுத் தலைமையாக முன்னிறுத்தப்பட்டது.

இந்த முயற்சிகளின் ஒரு அங்கமாகவே தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் தமிழ் மக்கள் பேரவையில் உள்வாங்கப்பட்ட பொதுவான சிலர், பேரவையானது ஒரு அரசியல் அமைப்பாகவோ, தேர்தல் அரசியல் செய்யும் அமைப்பாகவோ செயற்படக்கூடாது என்றும், அவ்வாறு செற்படுமாக இருந்தால் தாம் பேரவையிலிருந்து வெளியேறிவிடுவோம் என்றும் கூறியதைத் தொடர்ந்து தமிழ் மக்கள் பேரவை ஒரு முடக்க நிலையை அடைந்தது – அதன் ஊடாக பலாபலன்களை அடைந்து கொள்ளமுடியாது என்ற நிலையில் சிலர் ஒதுங்கத் தொடங்கியுள்ளனர்.

மறுபுறத்தில், மாற்றுத் தலைமை ஒன்றுக்கான விவாதங்களும் விளக்கமளிப்புக்களும் முன்னெடுக்கப்பட்டபோதும், விக்கினேஸ்வரன் மாற்றுத் தலைமையாக பொறுப்பேற்பதிலிருந்து நழுவிக்கொண்டே இருந்தார். அதற்குக் காரணம் அவர் அரசியல் நெளிவு சுழிவுகள் தெரிந்த அரசியல் அனுபவசாலி இல்லை என்பதும், அத்தகைய செயற்பாடு முதலமைச்சர் என்ற கௌரவத்திலிருந்து தன்னை இலகுவாக தூக்கி எறிய உதவியாக அமைந்துவிடும் என்று அஞ்சியதுமே காரணமாக இருந்தது.

அதற்கும் அப்பால் தொடர்ந்தும் அரசியலில் இருக்க மனதளவில் அவர் விரும்பியிருக்கவும் இல்லை. தற்போதைய வடமாகாணசபையின் பதவிக்காலம் நிறைவுக்கு வருவதுடன் ஓய்வுக்குச் சென்றுவிட வேண்டும் என்றும், தனக்கும் அரசியலுக்கும் ஒத்துவராது என்றும் அவர் வெளிப்படையாகவே தெரிவித்தார்.

அதுமட்டுமன்றி, மாற்றுத் தலைமை இப்போதைக்கு அவசியமில்லை என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இருக்கும்வரை அதற்கான தேவை இருப்பதாக கருதவில்லை என்றவிதமாகவும் விக்கினேஸ்வரன் கூறினார்.

விக்கினேஸ்வரனின் அந்த முடிவானது மாற்றுத் தலைமை தொடர்பாக பேச்சுக்களை முன்னகர்த்திச் சென்றவர்களுக்கும், மாற்றுத் தலைமை ஒன்றின் அவசியத்தை வலியுறுத்தி வந்தவர்களுக்கும் பெருத்த ஏமாற்றத்தையே கொடுத்தது.

மாற்றுத் தலைமையை ஏற்க மறுத்த விக்கினேஸ்வரனை சுரேஸ் மற்றும் கஜேந்திரன் மற்றும் வெளியில் இருந்தவர்களும் மெதுவாக விமர்சிக்கத் தொடங்கியிருந்தார்கள்.

விக்கினேஸ்வரனை இணைத்தலைமையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையும், ‘எழுக தமிழ்’ நிகழ்வுகளுக்குப் பெற்றுக்கொண்ட பிரபலத்தை மெதுவாக இழந்துவந்த நிலையில், தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகித்த கஜேந்திரன், சுரேஷ் ஆகியோர் அதிலிருந்து பின்வாங்கி தமது கட்சியின் புனரமைப்பு சார்ந்த பணிகளை முன்னெடுக்கத் தொடங்கினார்கள்.

இந்த நிலையிலேயே அண்மையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கருத்துத் தெரிவிக்கும்போது விக்கினேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக உள்வாங்கப்படும்போது நடைபெற்ற பேச்சுக்கள், இணக்கங்கள் என்பவற்றை வெளிப்படுத்தி அவர் மீதான விமர்சனங்களை முன்வைத்ததுடன், அடுத்த தடவை மீண்டும் விக்கினேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கும் எண்ணம் தமக்கு இல்லை என்பதையும் வெளிப்படுத்தியிருந்தார்.

அதைத் தொடர்ந்து பதிலளிக்கும் விதமாக கருத்துத் தெரிவித்த விக்கினேஸ்வரன், தனது மாணவன் தன் மீதான அதீத அக்கறையில் பல காரணங்களைக் கூறி தன்னை ஓய்வெடுக்கக் கூறுகின்றார். ஆனால் தமிழ் மக்கள் எதிர்கொண்டு இருக்கும் பிரச்சினைகளைப் பார்க்கின்றபோது அவ்வளவு எளிதாக ஓய்வு எடுக்க முடியாது என்றும், தனிக்கட்சியாகவோ, ஒத்த கருத்துள்ளவர்களுடன் கூட்டாகவோ தொடர்ந்து அரசியல் பணிகளை முன்னெடுப்பது தொடர்பாக முக்கிய தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக அறிவித்திருக்கின்றார்.

விக்கினேஸ்வரனின் அந்த அறிவிப்பைத் தொடர்ந்து வெறும் வாய்க்கு அவல் கிடைத்ததைப்போன்று மீண்டும் தமிழர் அரசியல் தளத்தில் ஊகங்களும், விவாதங்களும் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளன.

விக்கினேஸ்வரன் முன்னெடுக்கும் அரசியல் முயற்சிக்கு தாம் ஆதரவளிப்பதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் முதல் செய்தியை பதிவு செய்தார். அதைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த கஜேந்திரன் பொன்னம்பலம், முதலமைச்சர் முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான உறவையும், தொடர்பையும் துண்டித்துவிட்டு தனியாக செயற்படவேண்டும் என்றும், கூட்டமைப்புக்கு எதிரான அரசியல் போக்கிற்கு இணங்கிச் செயலாற்றும் தரப்புகளுடன் கூட்டாகச் செயற்படுவாராக இருந்தால் தாமும் இணங்கிச் செயற்பட முடியும் என்றும் கூறியிருந்தார்.

அதேவேளை அவ்வாறு ஒரு கூட்டு செயற்பாட்டின்போது சுரேஷ் பிரேமச்சந்திரனும் அதற்குள் உள்வாங்கப்படுவாரா? என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போது, அவருடன் செயற்பட்ட காலத்தில் நம்பகத்தகுந்தவிதமாக அவர் செயற்படவில்லை என்றவாறாக அவநம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்தார்.

எனினும் கஜேந்திரனின் கருத்தில் மறைந்து இருக்கும் அவரின் அச்சத்தையும் நாம் மறுக்கமுடியாது. அதாவது கூட்டமைப்பு எதிரான அரசியல் செயற்பாட்டை தனியான கட்சி அமைத்து விக்கினேஸ்வரன் முன்னெடுப்பாராக இருந்தால் அது தனது அரசியலைப் பாதிப்பதுடன், கூட்டமைப்புக்கு எதிரான வாக்காளர்களை தன்னைவிடவும், விக்கினேஸ்வரன் ஈர்த்துக்கொள்வார் என்றும் அஞ்சுவதையும் புரிந்துகொள்ளமுடிகின்றது.

ஆகவே விக்கினேஸ்வரன் தனியாக செயற்படுவதைத் தடுத்து ஒரு கூட்டுச் செயற்பாட்டுக்குள் விக்கினேஸ்வரனை உள்ளீர்த்துக்கொண்டால் அரசியல் ரீதியான பாதிப்புக்களிலிருந்து தாம் பாதுகாக்கப்படலாம் என்பதே கஜேந்திரன் அணியினரின் திட்டமாக இருக்கக்கூடும்.

விக்கினேஸ்வரனுக்கும் அரசியல் கட்சி ஒன்றை அமைப்பதும், அதற்குத் தலைமை ஏற்று செயலாற்றுவதும் ஒழுக்க ரீதியாக பொருத்தப்படாத காரியங்களாகும். எனவே பெரும்பாலும் கூட்டொன்றை ஏற்படுத்திக்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக களம் இறங்குவது என்பதே பொருத்தமான தெரிவாக இருக்கும்.

அவ்வாறு கூட்டு அமையும்போது தனது பழைய சகாக்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரன் ஆகியோரையும் மேலதிகமாக ஆனந்தசங்கரி, தமிழரசுக்கட்சியிலிருந்து அதிருப்தியோடு வெளியேறிய ஜனநாயக தமிழரசுக் கட்சி ஆகியோரை ஒன்றினைத்துக்கொண்டு செயற்படுதற்கான சாத்தியங்களே அதிகமாகும்.

தற்போது தனிப்பட்ட விஜயமாக இந்தியா சென்றிருக்கும் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் நாடு திரும்பியதும் இவ்விடயங்கள் சூடுபிடிக்கத் தொடங்கும். கடந்த நான்கு வருடங்களாக முதலமைச்சராக செயற்பட்ட விக்கினேஸ்வரன் தீவிரமான அரசியல் செயற்பாட்டை முன்னெடுக்கவோ, அதற்காக தன்னை அர்ப்பணித்து உழைக்கவோ கூடியவரல்ல – கௌரவ பதவிகளை அலங்கரிக்கும் தலைமையாகவே இருக்க விரும்புவார்.

அதாவது எலிகள் புற்றெடுக்க பாம்பு குடிபோனதைப் போன்று, பலர் சேர்ந்து உருவாக்கும் கௌரவ ஆசனத்தில் அமர்ந்துகொள்வார்.

விக்கினேஸ்வரனை கௌரவமாக அமர்த்திக்கொண்டு தமது அரசியல் செயற்பாட்டை முன்னெடுப்பதே எதிர்காலத்தில் அனுகூலமாக அமையும் என்ற நிலையில் சிந்திக்கும் தரப்புகளுக்கு, விக்கினேஸ்வரனுக்கு முடிசூடிவிட்டு தமது காரியங்களை முன்னகர்த்துவதில் சங்கடங்கள் இருக்கப்போவதில்லை.

ஆக, கூட்டமைப்பிற்கு எதிரான மக்கள் மத்தியில் ஏற்டக்கூடிய  அதிருப்திகளை தமக்கான வாக்குகளாக மாற்றி அதிகாரத்திற்கு வரக் காத்திருக்கும் தரப்புக்கள் விக்னேஸ்வரனுக்கு கொம்பு சீவி தேர்தல் பந்தயத்தில் முன்னால் தள்ளிவிட இப்போதே தயாராகி வருவதை அவதானிக்க கூடியாதாகவுள்ளது.

மீண்டும் இன்னொரு வீச்சில் சந்திக்கும்வரை நன்றி-