Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

Weekly Special

முகநூலில் மிரட்டுகிறது ஒரு மறை முகம்!

வயிற்றுப் பசியை போக்க எதாவது உணவு – முக்கிய உடல் அவையவங்களுகான ஓரு மறைப்பு – அலைந்து திரிந்த அயர்ச்சியை போக்க ஒதுங்க ஓர் ஓரம், இப்படி ஆரம்பித்த மனித குலத்தின் வாழ்வு, படிப் படியாக பரிணாமம் பெற்று பல சவால்களை தகர்த்தெறிந்து இன்று சிகரம் தொட்டு நிற்கிறது என்றால் அது மிகை அல்ல.

மேலும் மேலும் அதிகரிக்கும் தேவைகளுடனான மனிதனின் இன்றைய இந்த வாழ்க்கை முறைமை இத்துடன் நிறை வடைந்து விட்டாதா? மனித ஏக்கங்கள், அது ஏற்படுத்தும் தேவைகள் அதன் ஊடான அறிவியல் அறிமுகங்கள் எதுவரை செல்லப் போகின்றன…? இப்படி இது தொடர்பான பல கேள்விகளுக்கான விடைகள் கேள்விகளாகவே தொக்கி நிற்க, இன்றைய மனிதனின் தேவைகளில் ஒன்றாகிவிட்ட அறிவியல் வளர்ச்சியின் உச்சங்களில் ஒன்று மனிதனை அச்சம் அடையவும் வைத்திருகிறது.

இன்றைய தொடர்பாடல் வளர்ச்சியில் சமூக வலைத்தளங்கள் தவிர்க்க முடியாத ஓர் இடத்தை பிடித்துள்ளன. அதிலும் பேஸ்புக் என்னும் முகநூல் கணக்கு இல்லாதவர்கள் இன்று இல்லை என்றே சொல்லிவிடலாம். சிறுவர்கள் முதல் முதியோர் வரை, உச்சம் பெற்ற முதலாளிகள் முதல் கடை நிலை தொழிலாளிகள் வரை முகநூல் பாவனை அற்றவர்கள் இன்று அரிது என்றே சொல்ல வேண்டும்.

உலகின் பட்டி தொட்டி எங்கும் இனம், மதம், பால், ஜாதி, வர்க்கம் அனைத்து வரையறைகளையும் தாண்டி அனைவரையும் ஆக்கிரமித்து நிற்கிறது இந்த முகநூல் தொடர்பாடல்.

கூடுதலான வசதிகளை வழங்கும் ஆன்ரோய்ட் பொறிமுறை உள்ள கைத் தொலைபேசிகளே உலகில் கூடுதலானவர்களால் பயன்படுத்தப் படுவதாக புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கின்றது. கூடுதலாக இதனைப் பயன் படுத்துபவர்கள் அனைவரும் முகநூலிலும் ஒரு கணக்கை ஆரம்பித்து இலகுவாக தம் தொடர்பான தகவல்களை தமக்கு தெரிந்தவர்களுக்கு மட்டுமல்லாது ஊரறியவும் செய்து வருகின்றனர்.

இந்த முகநூல் என்ற சமூகவலைதளம் மூலம் உலகத்தில் உள்ள அனைத்து மக்களையும் ஒன்றிணைத்துவிட முடிவதுடன் ஒரு விடயம் தொடர்பான பாரிய பிரபல்யத்தையும் பெற்று விட முடிகிறது. இந்த பிரபல்யம் எவ்வளவு சாதகமான பெறுபேறுகளை பெறுகிறதோ அதேயளவு பாதகமும் இதில் உள்ளது.

எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் வெடித்த மக்கள் போராட்டங்களில் கூட இந்த முகநூல் பெரும் பணியை ஆற்றி இருக்கிறது. இந்தியாவின் தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு பெருகி ஒரு பெரிய மாற்றம் ஏற்பட காரணம் முகநூல் என்பதும் யதார்த்த உண்மை.

இந்நிலையில் 2016ம் ஆண்டு இடம்பெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் முகநூல் மூலமாகவே மக்களின் நன்மதிப்பை பெற்று தேர்தலில் வெற்றி வாகை சூடினார் என்ற தற்போது எழுந்துள்ள ஒரு தகவல், உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அந்த தேர்தலில் ட்ரம்ப் கட்சியின் பிரச்சாரப் பணிகளை மேற்கொண்ட கேம்பிரிட்ஜ் அனல்டிக்கா என்ற நிறுவனத்திற்கு, பேஸ்புக் மூலமாக வாக்காளர்களின் தனிப்பட்ட தகவல்கள் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அந்த நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்ததாகவும் இதற்க்கு பேஸ்புக் நிறுவனம் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே அனுமதி வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான கேள்விகள் துறைசார் வல்லுனர்களால் எழுப்பப் பட்டதை அடுத்து கேம்பிரிட்ஜ் நிறுவனம் அதன் முக்கிய அதிகாரியான அலேக்ஸான்ண்டே நிக்ஸ் என்பவரை பணிநீக்கம் செய்துள்ளது. பின்னர் இந்த குற்றச்சாட்டை பேஸ்புக் இணை நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் அவர்களும் ஏற்றுக் கொண்டு அதற்காக மன்னிப்பும் கோரி இருந்தார்.

பலரது அந்தரங்க தகவல்கள் அவர்களது அனுமதி இன்றியே திருடப்பட்டுள்ளதானது. பேஸ் புக் பாவனையாளர்கள் மத்தியில் மட்டுமல்லாது அதன் இணை நிறுவனமான வாட்ஸ்அப் பாவனையாளர்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பேஸ்புக் மற்றும் கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனங்கள் சமூக வலைத்தள பயனர்களின் தகவல்களை சத்தமில்லாமல் சேகரித்து அவற்றை தேர்தல் முறைகேடு போன்றவற்றிற்கு பயன்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டு பல்வேறு நாடுகளில் பலவிதமான சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக முகநூலில் இருந்து மக்களின் தனிப்பட்ட தகவல்களை திருடி நியூயோர்க் நிறுவனம் ஒன்றை பயன்படுத்தி இந்தியாவின் இந்திரா காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின மதிப்பை உயர்த்த அந்தக் கட்சி முயற்சித்து வருவதாகவும்,  மக்களவை தேர்தலில் அவரை வெற்றி பெற வைக்க டிஜிட்டல் தந்திரத்தை அக்கட்சி மேற்கொண்டுள்ளதாகவும் ஆளும் பாஜக குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது.

2014ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலேயே கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் மூலம் தங்களின் தகவல்களை விளம்பரப்படுத்தி பாஜக கூட்டணி அரசு வெற்றி பெற்றதாக காங்கிரஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தியா மட்டுமல்ல பல நாடுகளின் அரசியல் கட்சிகள் மக்களின் வாக்குகளை பெற்று எப்படியாவது வெற்றிக்கனியை பறிக்க டிஜிட்டல் மோசடியிலும் தற்போது இறங்கியுள்ளதாக வலைத்தள நிபுணர்கள் வெளியிடுள்ள தகவல்கள் மேலும் அதிர்ச்சியளிக்கிறது.

சமூக வலைதளங்களை பயன்படுத்தும் உலகின் பலகோடி மக்கள் அதற்கு அடிமையாக இருப்பதை தெரிந்து கொண்ட அரசியல் கட்சிகள் வெளிநாட்டு நிறுவனங்களின் உதவியுடன் தங்களைத் தாங்களே வானளாவ புகழ்ந்து கொண்டு மக்களின் நன்மதிப்பை பெற்று அதை தேர்தலில் வாக்குகளாக மாற்றிவருகின்றனர். தங்களை புகழ்வதற்காக இதற்கெனவே பணம் கொடுத்து ஏஜெண்டுகளை பல கட்சிகள் நியமித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது .
அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற முஸ்லீம் மக்கள் மீதான இன வன்முறைகள் மேலும் அதிகரிப்பதற்கு, இந்த சமூக வலைத்தளங்கள் ஊடாக பரப்பப் பட்ட இனவாதப் பரப்புரைகள் மற்றும் தவறான தகவல்களே முக்கிய காரணம் எனக் கூறி பல நாட்களாக இவற்றை தடை செய்து வைத்திருந்தது இலங்கை அரசு என்பதும், அதன் பின்னரே கலவரங்கள் கட்டுப்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களை பயன்படுத்தும் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பதுடன், அதில் வரும் தகவல்கள் அனைத்தும் உண்மை என்று நம்பிவிடக்கூடாது என்பதுடன் தங்கள் தொடர்பான இரகசிய தகவல்களையும் பொது விடயங்கள் தொடர்பான குறிப்பாக தமது அரசியல் சார்பு நிலை தொடர்பான தகவல்களை இந்த சமூக வலைத்தளங்களின் ஊடாக வெளியிடுவதை தவிப்பது நல்லது என நலன் விரும்பிகளினால் மக்கள் வேண்டப் பட்டுள்ளனர்.

மக்களுக்காகவும், நாட்டுக்காகவும் வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்து அவர்கள் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் அரசியல் கட்சிகள் செயல்ப்பட்டால் அவை வரவேற்கப்படவேண்டியதே.

ஆனால் அவர்கள் ஆட்சியை பிடிப்பதற்காக எந்தெந்த வகையில் மக்களை ஏமாற்ற முடியும் என்று திட்டமிட்டு முகநூல் போன்ற சமூகவலைதளங்களை பயன்படுத்துகிறார்கள். இதற்கு சம்மந்தப்பட்ட நிறுவனங்களும் துணைபோகின்றன.

இப்போது வெளியாகும் தகவல்கள் அனைத்தும் முகநூல் போன்ற அனைத்து சமூக வலைதளங்களின் நம்பகத் தன்மையை கேள்விக் குறி ஆக்குவதுடன் இவற்றின் மறுமுகத்தை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியத்தையும் ஏற்படுத்தியுள்ளது .

-ஆண்டாள்

WEEKLY SPECIAL

பார்த்தேன் ரசித்தேன்

பார்த்தேன் ரசித்தேன்

பிழைகளற்ற பயணம்

அவிழா முடிச்சாகும் ஜெயலலிதா மரணம்

வள்ளலாக மாறிய ஒரு கேணல்