எமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்
In இலங்கை January 21, 2019 4:16 pm GMT 0 Comments 1308 by : Ravivarman

எமது அடையாளமான தமிழ்மொழியை நாங்கள் பாதுகாக்க வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி. துரைராசசிங்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
‘சுதந்திரம் அடைந்த இந்த நாட்டிலே மொழிக்காகப் போராடியவர்கள் நாங்கள். எமது மொழி எனும் அடையாளம் இல்லையென்றால் நாங்கள் தமிழராக இருக்க முடியாது.
வெறுமனே கலாசாரமாக தைப்பொங்கலைப் பின்பற்ற முடியாது. சிலாபம், முன்னேச்சரம், தொண்டீஸ்வரம், கதிர்காமம் போன்ற பகுதிகளில் இருந்த தமிழர்கள் தற்போது எங்கே?
தன்னை மறந்து, தன் நாமம், மொழி, இனம் மறந்து மாறிப் போய் விட்டான். மொழியை நாங்கள் இழந்தோமானால் எமது வாழ்வையே நாம் இழந்து விடுவோம்.
தமிழர்களின் திருநாள் என்று சொல்லப்படுகின்ற இந்தப் தைப்பொங்கல் தமிழர்களின் அடையாளம் இருக்கும் வரையில் தான் இருக்கும். பொங்கலை யாரும் பொங்க முடியும் ஆனால் இதனைத் தமிழன் பொங்க வேண்டும் என்றால் தமிழன் தமிழ் உணர்வை தன்னுள் தக்க வைத்திருக்க வேண்டும்.
தமிழன் தமிழனாக வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். தமிழனுக்கு அடையாளம் எமது மொழிதான் அதனை நாங்கள் பாதுகாக்க வேண்டும்” என துரைராசசிங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.