மன்னார் வாக்காளர் இடாப்பிலிருந்து 7727 வாக்காளர்கள் நீக்கம்- மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ரிஷாட் முறைப்பாடு!
In இலங்கை January 20, 2021 4:52 am GMT 0 Comments 1282 by : Yuganthini

மன்னார் வாக்காளர் இடாப்பிலிருந்து 7,727 வாக்காளர்கள் நீக்கப்பட்டமை தொடர்பாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார்.
குறித்த முறைப்பாட்டில் அவர் கூறியுள்ளதாவது, “வடக்கு மாகாணத்தின் மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து, புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்து வந்தவர்கள், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், கொத்தணி வாக்களிப்பு முறை ஊடாக, தமது மாவட்டத்தில் வாக்களிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.
அவ்வாறு சந்தர்ப்பம் வழங்கப்பட்ட அதிகமானவர்களின் வாக்காளர் பதிவை, மன்னார் உதவித் தேர்தல் ஆணையாளரும் அதிகாரிகளும் சேர்ந்து திட்டமிட்டு, வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கியுள்ளனர். எனவே, அவர்களது வாக்குகளை மீள அந்தந்த கிராமங்களில் பதிவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த வாக்காளர்கள் அனைவரும், மீள் குடியேற்றத்துக்காக சொந்த மண்ணுக்குச் சென்று, தமது பூர்வீக பிரதேசங்களில் தங்களுக்கான கொட்டில்களையோ அல்லது தற்காலிக இருப்பிடங்களை அமைத்த பிறகு, அங்கு கல்வி, சுகாதார, வர்த்தக நடவடிக்கைகளில் குறைப்பாடு இருந்ததினால் அல்லது இருப்பதற்கு ஒழுங்கான வீடுகள் இல்லாத காரணத்தினால், மீள் குடியேறிய இடங்களிலிருந்து தற்காலிகமாக மீண்டும் புத்தளத்துக்கு வந்திருக்கின்றனர்.
இவர்கள் மீள் குடியேறிய பிரதேசங்களில், உரிய வசதிகள் கிடைத்தவுடன் மீண்டும் அங்கு செல்வதற்கு விருப்பத்துடன் இருக்கின்றனர்.
அவ்வாறு ஆர்வத்துடன் இருக்கின்றவர்களின் வாக்குப்பதிவுகளை பலவந்தமாக நீக்கியமை மிகவும் பாரதூரமான மனித உரிமை மீறலாகும்.
இவ்வாறு வாக்காளர் பதிவு நீக்கப்பட்டவர்களுக்கு இலங்கையில் எந்தவொரு பிரதேசத்திலும் தற்பொழுது வாக்குகள் இல்லாத ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.
நாட்டின் பிரஜை ஒருவருக்கு வெவ்வேறு இடங்களில் வீடுகள் இருப்பதற்காக, சொந்தமாவட்டத்திலுள்ள வாக்காளர் இடாப்பை மாற்ற முடியாது.
கொழும்பில் வசிக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மெதமுலானையில் வாக்களிக்கிறார். முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா, மைத்திரி பாலசிறிசேன ஆகியோர் அத்தனகல்ல மற்றும் பொலனறுவையிலேயே வாக்களிக்கின்றனர்.
அவர்களுக்கு இவ்வாறான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியுமென்றால் ஏன் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு, புத்தளத்தில் வாழும் சாதாரண மக்களுக்கு அந்த வசதியை ஏற்படுத்திக் கொடுக்க முடியாது?
எனவே, மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளரால் வாக்களிப்பதற்கு தடுக்கப்பட்ட 7727 வாக்காளர்களையும், அவர்களது சொந்த மாவட்ட வாக்காளர் இடாப்பில் மீளப் பதிவு செய்து, அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும்.
அந்தவகையில் தடுக்கப்பட்ட மன்னார் பிரதேச சபை 2618, முசலி பிரதேச சபை 3452, மாந்தை மேற்கு பிரதேச சபை 1217, நானாட்டான் பிரதேச சபை 457, மன்னார் பிரதேச சபை 342 வாக்காளர்களையும் சொந்த மாவட்டத்தில் வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் வலியுறுத்திறுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.